இஸ்லாம்ய கல்வி

Article Of Porto Novo

Help Line

PNO Maricarn Tamil

Best Antivirus

PNO Marine Biology

Comments


parangipettai.pno@gmail.com
April 26, 2011
 

தமிழகம் முழுவதும், ஒவ்வொரு வீட்டுக்கும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மின்சாரத்தை சேமிக்கவும், மத்திய அரசு திட்டத்தில், நான்கு சி.எப்.எல்., பல்புகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.


 

ஒவ்வொரு வீட்டுக்கும் 4 சி.எப்.எல்., பல்புகள் இலவசம்: மின்சாரம் சேமிக்க ஏற்பாடு

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை சமாளிக்க, மாநிலம் முழுவதும், 2 முதல், 5 மணி நேரம் வரை, மின்தடை செய்யப்படுகிறது.தமிழகத்தை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள், தங்கள் வீடுகளில், குண்டு பல்புகளை பயன்படுத்துகின்றனர். இதில், 60 வாட்ஸ் குண்டு பல்பு, தினமும் ஒரு மணிநேரம் எரிந்தால், 65 கிராம் கரியமிலவாயு வெளியேறுவதுடன், மாதத்தில், 1.8 யூனிட் செலவாகும்.அதேநேரம், 15 வாட் சி.எப்.எல்., பல்பு, தினம் ஒரு மணி நேரம் வீதம், ஒரு மாதம் எரிந்தால், 0.45 யூனிட் மட்டுமே செலவாவதுடன், 16 கிராம் கரியமில வாயு மட்டுமே வெளியேற்றுகிறது.தமிழகத்தில் ஒன்றரை கோடி, வீட்டு மின் இணைப்பு உள்ள நிலையில், அனைவரும் சி.எப்.எல்., பல்பு பயன்படுத்தினால், 1,000 மெகாவாட் மின்சாரத்துக்கு மேல் மிச்சப்படுத்தலாம். மேலும், குண்டு பல்புகளை விட, சி.எப்.எல்., பல்புகளில் கரியமிலவாயு வெளியேற்றம் குறைவாக இருப்பதால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்.


இதை கருத்தில் கொண்டு, மின்சாரத்தை சேமிக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, சி.எப்.எல்., பல்புகள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதன் உபயோகத்தை அதிகரித்து, மின் உபயோகத்தை குறைக்க, மத்திய அரசு, நாடு முழுவதும் ஒவ்வொரு வீடுகளுக்கும், சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்க திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்பது மண்டலங்களை, இரண்டாக பிரித்து, முதல்கட்டமாக, விழுப்புரம் மின் மண்டலத்தின் சில பகுதியில், சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், மற்ற மண்டலங்களிலும், இலவச சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஈரோடு மண்டலத்தில் முதல்கட்டமாக, சேலம், கோபி, நாமக்கல், மேட்டூர் மின் வினியோக வட்டங்களில் உள்ள வீடுகளிலும், அடுத்த கட்டமாக, ஈரோடு வட்டத்திலும், சி.எப்.எல்., பல்புகள் விரைவில் வழங்கப்பட உள்ளன. ஒரு வீட்டுக்கும், நான்கு, 11 வாட்ஸ் சி.எப்.எல்., பல்புகள் வழங்கப்படவுள்ளன.நான்கு சி.எப்.எல்., பல்புகளுக்கு மாற்றாக, வீட்டு உரிமையாளர் நான்கு குண்டு பல்புகளை ஒப்படைக்க வேண்டும். இதன் மூலம், மக்களிடம், சி.எப்.எல்., பல்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படும். மின்சாரம் சேமிக்கப்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


குண்டு பல்புகளுக்கு தடை? குண்டு பல்பை விட, சி.எப்.எல்., பல்புகளின் விலை, பல மடங்கு அதிகம். ஒரு, 60 வாட்ஸ் குண்டு பல்பு, 10 ரூபாய்க்கும், அதே வெளிச்சத்தை தரும், 15 வாட்ஸ் சி.எப்.எல்., பல்பு, 110 முதல், 140 ரூபாய் வரை விற்கிறது. விலை குறைவாக இருக்கும் குண்டு பல்புகளை, ஏழை மக்களே அதிகம் பயன்படுத்துவதால், தடை விதிக்க அரசு தயங்குகிறது.ஆனால், சி.எப்.எல்., பல்புகள் விலை அதிகமாக இருந்தாலும், மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது. சி.எப்.எல்., பல்புகளை இலவசமாக வழங்குவதன் மூலம், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டு, அதை வாங்க துவங்கினால், நாளடைவில் குண்டு பல்புகள் உபயோகம், முற்றிலும் நின்று விட வாய்ப்புள்ளது.