Download Tamil Font SIPCOT Video Clips April 5, 2011
என் மீது பொய் வழக்கு போட்ட கலெக்டரையும்,
எஸ்.பியையும் கோர்ட்டில் ஏற்றுவேன்-அழகிரி ஆவேசம்


மதுரை:

என் மீது பொய் வழக்குகளைப் போட்ட மதுரை கலெக்டர்
சகாயத்தையும், எஸ்.பி. அஸ்ரா கார்க்க்கையும் நான் விட
மாட்டேன். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கோர்ட்டில்
ஏற்றாமல் விட மாட்டேன் என்று மத்திய ரசாயாணத்துறை
அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை மதுரையில் சந்தித்தார் அழகிரி.
அப்போது அவர் கூறுகையில்,

இந்த தேர்தலில் தேர்தல் கமிஷன் தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கெடுபிடியுடன் நடந்து
வருகிறது. என் மீது 2 நாட்களில் அடுத்தடுத்து 2 பொய் வழக்குகள் போட்டுள்ளனர்.
இந்த 2 வழக்குகளையும் யாருக்கு போட்டார்களோ அந்த அதிகாரிகளே அதனை
மறுத்து கலெக்டர் தூண்டுதலின் பேரில் இது நடந்தது என கூறியுள்ளனர்.

இது தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு அவர்கள் கடிதம் அனுப்பியும் தி.மு.க.
தரப்பில் புகார் செய்யப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே மதுரை கலெக்டர் சகாயம், போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க்
ஆகிய 2 பேர் மீதும் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். அவர்களை கோர்ட்டில்
ஏற்றி நியாயம் கேட்பேன்.

மதுரையை ஆன்மீக நகராக மாற்றுவேன் என ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
இப்போதும் மதுரை ஆன்மீக நகராக அழகாகத்தான் இருக்கிறது. இது மதுரை
மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஏற்கனவே ஒரு தேர்தலில் மதுரையை
சிங்கப்பூராக மாற்றுவேன் என்று ஒருவர் (சுப்பிரமணியசாமி) கூறினார்.
இப்போது அவர் எங்கு இருக்கிறார்? என்றே தெரியவில்லை. இதேபோல் தான்
ஜெயலலிதாவும் பேசுகிறார். தேர்தலுக்கு பிறகு கொடநாட்டுக்கு செல்கிறாரா?
அல்லது வெளி நாட்டுக்கு செல்கிறாரா? என்று தெரியவில்லை.

தேர்தல் பிரசாரத்தில் நடிகர் வடிவேலு மீது கல் வீசப்பட்ட சம்பவத்துக்கு அவரே
பதில் கூறிவிட்டார். எத்தனை முறை கல் வீசினாலும் எனது சொற்களை நிறுத்த
முடியாது என்று கூறியிருக்கிறார். சென்னையில் முதல்வர் கருணாநிதி யும்,
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் கலந்து கொண்டு பேசும் கூட்டத்தில்
தி.மு.க.வினரே குழப்பம் ஏற்படுத்தி விட்டு அ.தி.மு.க. மீது பழிபோட சதி திட்டம்
தீட்டியிருப்பதாக ஜெயலலிதா கூறியிருப்பது அவரது கற்பனையை காட்டுகிறது.

ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்று
அறிவித்துள்ளார்கள். அவர்கள் பேசுவார்களா? இல்லையா? என்று நாளை தான்
தெரியும். தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து
மதுரையில் நாளை மாலை நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் முதல்வர்
கருணாநிதி கலந்து கொண்டு பேசுகிறார்.

இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். எனது மகள்
கயல்விழியும் தீவிர தேர்தல் பிரசாரம் செய்கிறார். நாளை (6-ந்தேதி) கிழக்கு
தொகுதியிலும், 7-ந்தேதி மேற்கு தொகுதியிலும், 8-ந்தேதி மேலூர் தொகுதியிலும்
அன்று மாலை மதுரை மத்திய தொகுதியிலும், 9-ந்தேதி திருமங்கலத்திலும் அவர்
பிரசாரம் செய்கிறார் என்றார் அழகிரி.