Download Tamil Font SIPCOT Video Clips April 4, 2011
தாக்குதல் வழக்கில் அழகிரிக்கு முன் ஜாமீன்
தமிழகத்தின் மதுரை அருகே மேலுரில் தேர்தல் பிரச்சாரம்
முறையாக நடக்கிறதா எனக் கண்காணித்து வந்த
வட்டாட்சியர் ஒருவர் தாக்கப்பட்ட வழக்கில் மத்திய
அமைச்சர் மு.க. அழகிரிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின்
மதுரைக்கிளை இன்று ஞாயிற்றுக்கிழமை முன்
ஜாமீன் வழங்கியது.

மு.க. அழகிரி பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் வாக்காளர்களுக்குப்
பணம் தரப்படுகிறதா என விசாரிக்கவே அங்கு வட்டாட்சியர்
காளிமுத்து சென்றதாகவும் அப்போது அங்கிருந்த திமுகவினர்

மு.க.அழகிரி

அவரையும் புகைப்படக்கலைஞரையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து
மு.க.அழகிரி மதுரை துணை மேயர் மன்னன் மற்றும் திமுக பிரமுகர்கள் ரகுபதி, திருஞானம்
ஆகியோர் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மற்ற மூவரும் நேற்று சனிக்கிழமையே முன் ஜாமீன்பெற்றுவிட்டனர். அழகிரி இன்று
ஞாயிற்றுக்கிழமைமனுச்செய்து முன் ஜாமீன் பெற்றார்.

வட்டாட்சியர் தாக்கப்பட்டதை கண்டித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
வருவாய்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் சதாசிவம் தலைமையில் கண்டன
ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் சகாயம், அமைச்சர் அழகிரி மீது பொய் வழக்கு பதிவு
செய்யுமாறு தன்னை வற்புறுத்துவதாகப் புகார் கூறிய மதுரை கிழக்கு தொகுதி தேர்தல்
அதிகாரி சுகுமாரன் உடனடியாக இடமாற்றம் செய்யப்படவேண்டுமென தமிழக தலைமை
தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் உத்திரவிட்டிருக்கிறார்.

சகாயத்தின் அணுகுமுறையினால் தான் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும்,
இதேநிலை நீடித்தால் தான் தற்கொலை செய்யும் நிலை ஏற்படும்,எனவே மதுரைகிழக்கு
தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படவேண்டும் எனவும் அவர் பிரவீன்குமாருக்கு
எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார். மருத்துவமனையிலும் சுகுமாரன் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவர் கடிதம் வந்த சில மணிநேரங்களிலேயே அவர் வேறு ஒரு மாவட்டத்திற்கு இடமாற்றம்
செய்யப்படவேண்டும் என பிரவீன்குமார் உத்திரவிட்டதாக செய்திகள் கூறுகின்றன.

மதுரை ஆட்சியர் சகாயமோ சுகுமாரன் கூறுவது முழுக்க முழுக்க பொய். அரசு ஊழியராக இருந்து
கொண்டு மேல் அதிகாரி மீது புகார் கூறுவது ஒரு மோசமான நிலை என்று செய்தியாளர்களிடம்
கூறியிருக்கிறார்.