April 29, 2011
 

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக லட்சக் கணக்கில் மோசடி!

சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 250க்கும் மேற்பட்டோரை ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் பணத்தைச் சுருட்டி மோசடி செய்த, சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த இளைஞர்கள், கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

சென்னை இராயபுரம், புதுமணிக் குப்பத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 40). இவர், சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல ஓட்டல் மற்றும் ஜுவல்லரி நிறுவனத்தில் பணிபுரிய, ஆட்களை நேரடியாக தேர்வு செய்து அனுப்புவதாக பலரிடம் கூறியுள்ளார். இதை நம்பி, வடசென்னையைச் சேர்ந்த பல இளைஞர்கள், பாஸ்போர்ட்டுடன், 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை இவரிடம் செலுத்தியுள்ளனர்.

இதைப்பற்றி கேள்விப்பட்டு, சென்னை தவிர கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த, 250க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இவரிடம் பணம் செலுத்தியுள்ளனர். அவர்களிடம், 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் பெற்றுத் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அதிகளவில் பணம் பெற்றுள்ளார். ஆனால், யாரையும் இதுவரை வேலைக்கு அனுப்பவில்லை. மாறாக, சிலருடைய பாஸ்போர்ட்டில், போலி விசா ஆவணங்களை இணைத்துக் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

போலி விசா அளித்த விவரங்கள் அறிந்த இளைஞர்கள் சிலர், நேற்று முன்தினம் புதன் அன்று, சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், இராயபுரம் சென்று, பிரகாஷைக் கைது செய்தனர்.

பிரகாஷிடம் பணம் கொடுத்து ஏமாந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள், நேற்று சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பிரகாஷ் மீது புகார்களை அளித்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டவர்கள் புகார் அளிக்க தயாராக இருப்பதாகவும், வந்தவர்கள் தெரிவித்தனர்.