April 29, 2011
 

ராணுவ ஜெட் விமானம் காட்டுப்பகுதியில் விழுந்தது

தேன்கனிக்கோட்டை : காட்டுப்பகுதியில் ராணுவ ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி எரிந்து நாசமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே பேவநத்தம் செல்லும் சாலையில் குள்ளட்டி, லட்சுமிபுரம் ஆகிய கிராமங்கள் உள்ளன. நேற்று பிற்பகல் 3 மணியளவில் இப்பகுதியில் குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தனர்.

சாலையோரம் தரிசாக கிடந்த விவசாய நிலத்தில் இருந்து கரும்புகை எழும்பியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அருகே சென்று பார்த்தபோது, ராணுவத்துக்கு சொந்தமான ஜெட் விமானம் விபத்துக்குள்ளாகி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர். ஆனால், உள்ளே வீரர்கள் யாரும் இல்லாதது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் ஜெட் விமானம் கொழுந்து விட்டு எரிந்ததால், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட வன அலுவலர் உலகநாதன், உதவி வன பாதுகாவலர் மாது மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

ஊடேதுர்க்கம் காட்டுப்பகுதியில் பாராசூட் மூலம் குதித்ததால் படுகாயம் அடைந்த பைலட்டுகள் 2 பேரை அவர்கள் மீட்டு தண்ணீர் கொடுத்தனர். காயத்துடன் கிடந்த  பைலட்டுகள்  இந்தியில் பேசினர். தங்களை விங் கமாண்டர்கள் பத்ரா, மத்து என அறிமுகப்படுத்தி கொண்டனர். பெங்களூரில் உள்ள ராணுவ பயிற்சி தளத்தில் இருந்து ஜெட் விமானத்தில் வந்ததாகவும், வழியில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் பாராசூட் மூலம் கீழே குதித்து உயிர்தப்பியதாக கூறினர்.

விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான முயற்சி தோல்வியில் முடிந்ததால், பாராசூட் மூலம்  தப்பியது தெரிய வந்தது. விபத்துக்குள்ளான ஜெட் விமானம் சிறிது தூரத்தில் உள்ள கிராமத்திற்குள் விழுந்திருந்தால் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டு இருக்கும்.

பெங்களூரில் இருந்து 3 ஹெலிகாப்டர்கள் மின்னல் வேகத்தில் வந்தன. ராணுவ வீரர்கள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். ஒரு ஹெலிகாப்டர் வானில் வட்டமிட்டுக்கொண்டிருந்த நிலையில், மீதம் உள்ள 2 ஹெலிகாப்டர்கள் தரையிறங்கின. அவற்றில் வந்த ராணுவ வீரர்கள், படுகாயத்துடன் கிடந்த 2 பைலட்களையும் மீட்டனர். பின்னர், அவர்களை ஹெலிகாப்டர்களில் ஏற்றிக் கொண்டு மீண்டும் பெங்களூர் சென்று விட்டனர். சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. மற்றும் வனத்துறை அதிகாரிகள் கூறினர்.