April 29, 2011
 

3 பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்படும்

திருவண்ணாமலை : ‘இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படும்’ என இஸ்ரோ இயக்குனர் எம்.சந்திரதத்தன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியில் மானுடவியல் மற்றும் அறிவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நேற்று நடந்தது. கல்லூரி முதல்வர் பி.ஜெயக்குமார் தலைமை வகித்தார். இதில், இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் (இஸ்ரோ) சதீஷ் தவான் விண்வெளி மைய இயக்குனர் எம்.சந்திரதத்தன் பேசியதாவது:

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை வெற்றிகரமாக செலுத்துவதற்கான பரிசோதனைகள் நடந்து வருகிறது. முதற்கட்டமாக திட எரிபொருள் பரிசோதனையும், இரண்டாவது கட்டமான திரவ எரிபொருள் பரிசோதனையும் நடந்து முடிந்துள்ளது. முக்கியமான மூன்றாவது கட்டமான கிரயோஜெனிக் இன்ஜின் சோதனை 2012ல் முடிவடையும்.

அதைத்தொடர்ந்து, ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படும். ராக்கெட்டுகளை ஏவ மரபுசாரா எரிபொருட்களை பயன்படுத்துவது நம்முன் உள்ள சவாலாக உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இஸ்ரோவில் இருந்து 3 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை விண்ணில் ஏவுவதற்கு திட்டமிட்டிருக்கிறோம். தட்பவெட்ப நிலையை முன்கூட்டியே கணித்து சொல்லக்கூடிய ஜிசாட் 12 செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட பிஎஸ்எல்வி பி17 ராக்கெட் ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்படும். செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்எல்வி பி18 ராக்கெட் ஏவப்படும். மேலும், ரேடார் தொழில்நுட்பத்துக்கு உதவக்கூடிய ரைசாட் எனும் செயற்கைக்கோள் பொருத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி பி19 ராக்கெட் இந்த ஆண்டு இறுதியிலும் ஏவப்படும்.