இஸ்லாம்ய கல்வி

Article Of Porto Novo

Help Line

PNO Maricarn Tamil

Best Antivirus

PNO Marine Biology

Comments

April 28, 2011
 

அணுகுண்டு சோதனை இந்தியா மீண்டும் நடத்தும்

பெய்ஜிங் : இந்தியா அணுகுண்டு சோதனையை மீண்டும் தொடங்கக்கூடும் என்று சீன அரசின் நாளேடு பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
சீன அரசு சார்பில் நடத்தப்படும் நாளேடு, பீப்பிள்ஸ் டெய்லி. அதன் கட்டுரையாளரான லீ ஹாங்மெய், ‘இந்தியா அணுகுண்டு சோதனையை தொடருமா?’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை நேற்று வெளியானது. அதில் இடம்பெற்ற தகவல் வருமாறு:

அணு ஆயுத சோதனை நடத்துவதாக தொடர்ந்து வட கொரியா, ஈரான் மீது சர்வதேச நாடுகளின் கவனம் நீடிக்கிறது. ஆனால், திரை மறைவில் வேறு சில உண்மைகள் இருக்கின்றன. அமெரிக்க ஆதரவு அணு ஆயுத தயாரிப்புகள், இந்திய அணுசக்தி முயற்சிகள் அவை.

அணு ஆயுத பரவல் தடை சட்டத்தில் (என்பிடி) கையெழுத்திட இந்தியா தொடர்ந்து மறுத்து வந்துள்ளது. அதற்கு பின்னால் காரணம் இருக்கிறது. அணு ஆயுதங்களை வைத்திருக்க உலகின் முதல் 5 வல்லரசு நாடுகள் மட்டுமே ஏகபோகமாக இருக்கக் கூடாது என்பது அதன் கருத்து. எனவே, அணுகுண்டு சோதனையை இந்தியா தொடர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த விஷயத்தில் சீனாவும் மற்ற நாடுகளும் மிகவும் எச்சரிக்கையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டியது அவசியம். அணு ஆயுத பலம் பெற்ற நாடாக சர்வதேச நாடுகளால் அங்கீகாரம் பெற வேண்டும் என்பது இந்தியாவின் நீண்ட கால ஆசை. அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலமே பாகிஸ்தானை சமாளிக்க முடியும் என அது நம்புவதும் இதற்கு காரணம். இவ்வாறு கட்டுரையில் லீ தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1974ம் ஆண்டிலும், வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 1998ம் ஆண்டிலும் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது குறிப்பிடத்தக்கது.