May 7, 2011
 

ஒசாமாவுக்கு சென்னை, கொல்கத்தாவில் சிறப்புத் தொழுகை!

பாகிஸ்தானில் அமெரிக்க படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ஒசாமா பின் லேடனுக்கு சென்னை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.

தொலைதூரங்களில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் இறந்தால் அவர்களுக்காக காயிப் ஜனாசா எனப்படும் மறைவான இறப்புத் தொழுகை நடத்துவது வழக்கம். அந்த அடிப்படையில் ஒசாமா பின் லேடனுக்காக சென்னையில் உள்ள மக்கா மசூதி மற்றும் கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் மசூதி ஆகிய இடங்களில் "இறப்புத் தொழுகை"கள் நடத்தப்பட்டன.

மக்கா மசூதியின் தலைமை இமாம் சம்சுத்தீன் காசிமி, அமெரிக்காவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இஸ்லாமிய நெறிப்படி பின்லேடனின் உடலை அடக்கம் செய்யவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஆயிரக்கணக்கானோர் இத்தொழுகையில் கலந்து கொண்டனர்.

கொல்கத்தாவில் உள்ள திப்பு சுல்தான் மசூதியில் தலைமை இமாம் நூருர் ரஹ்மான் பர்கதி தலைமையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் கலந்து கொண்ட அகில இந்திய சிறுபான்மை அமைப்பின தலைவர் இத்ரீஸ் அலி, அமெரிக்கப் படையால் கொல்லப்பட்ட ஒசாமாவுக்காக சிறப்புத் தொழுகை நடைபெற்றது. சுட்டுக் கொல்லப்பட்ட அவரது உடலை உரிய முறையில் அடக்கம் செய்யாமல் கடலில் வீசி, இஸ்லாத்தை அவமதித்துள்ளனர் என்று கூறினார்.

குர்ஆனை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று எழுதப்பட்ட விளம்பர அட்டைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தன.

இந்தத் தொழுகையை ஒட்டி திப்பு சுல்தான் மசூதியில் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.