May 6, 2011
 

உலகில் அமெரிக்கா புரிந்துவரும் அட்டுழியங்களுக்கு உலகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் -அலவி மௌலானா

அமெரிக்க அரசாங்கம் மற்ற நாடுகளின் மீது ஈவிரக்கமற்ற முறையில் தன்னுடைய கொலை வெறியை கட்டவிழ்த்துள்ளபோதும், இலங்கை போன்ற ஒரு சிறிய நாடு உலகின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈயை மனித உரிமைகளுக்கு தீங்கி ழைக்காத வகையில் யுத்த முனையில் படுதோல்வியடையச் செய்தது என மேல் மாகாண ஆளுநர் அலவி மெலளானா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விடுதலைப் புலிகளை தோழ்வியடையச் செய்தததை ஒரு பெரிய யுத்தக் குற்றச்சாட்டாக பிரகடனம் செய்து இலங்கையை சர்வதேச ரீதியில் அபகீர்த்திக்கு உட்படுத்தி வருவது மன்னிக்க முடியாத ஒரு குற்றம் என்றும் அலவி மெளலானா கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்று தீர்மானித்தவுடன், அடிப்படை மனித உரிமைகளை மூட்டைகட்டி வைத்துவிட்டு அந் நாடுகள் மீது போர்க்கொடி தொடுத்து பேரழிவை ஏற்படுத்தி வருகின்றது. முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதியையும் அவரது பிள்ளைகளையும், பேரப் பிள்ளைகளையும் துடிதுடிக்க படு கொலை செய்ததை உலகம் என்றும் மன்னிக்காது என்று கூறினார்.

அதுபோல் லிபிய ஜனாதிபதி கடாபி மீதும் அமெரிக்கா அடக்கு முறையை கட்டவிழ்த்துள்ளது. அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் கடாபி மயிரிழையில் உயிர்தப்பிய போதும் அவரது ஆறாவது மகனும் மூன்று பேரப் பிள்ளைகளும் உயிரிழக்க வேண்டியேற்பட்டது. இத்தகைய அடக்கு முறைகளுக்கு நாம் முடிவு கட்ட வேண்டுமென்று கூறிய அலவி மௌலானா, முழு உலகமும் ஓரணியில் நின்று உலகத்தின் பொலிஸ்காரன் என்ற இறுமாப்பில் அமெரிக்கா புரிந்து வரும் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமென்றும் இல்லையேல் அமெரிக்கா மனித சுதந்திரத்தை அழித்துவிடுமென்றும் தெரிவித்துள்ளார்.