May 2, 2011
 

குற்றப்பத்திரிக்கைக்குப் பிறகே கலைஞர் டி.வியுடன் ஒப்பந்தம் நடந்துள்ளது - சிபிஐ

2G ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பாக முதல் தகவல்அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்ட பின்னரே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி அளிக்கப்பட்டது குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சிபிஐ தெரிவித்துள்ளது.

2G ஊழல் தொடர்பாக சிபிஐ சமீபத்தில் தாக்கல் செய்துள்ள துணைக் குற்றப்பத்திரிகையில் ஸ்வான் டெலிகாம், டி.பி. ரியாலிட்டி நிறுவனங்கள் மூலம் கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியுள்ளது.23-12-2008 மற்றும் 07-08-2009க்கு இடைப்பட்ட காலத்தில் இந்த பணம் கைமாறியுள்ளது. கலைஞர் டி.வி.க்கு அளிக்கப்பட்டது குறித்து அப்போது ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை.

2G ஊழல் குறித்து அக்டோபர் 21,2009இல் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதையடுத்தே கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி கைமாறியது தொடர்பாக முறைப்படி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.27-01-2010-ல் தான் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இவ்வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து விசாரிக்கத் தொடங்கி, இந்த வழக்கில் தீவிரம் காட்டியதை அடுத்தே கலைஞர் டி.வி. பணத்தை திருப்பி அளித்துள்ளது என்று சிபிஐ குற்றம் சுமத்தியுள்ளது.

2G வழக்கில் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ள டி.பி.ரியாலிட்டி கணக்காளர் சதீஷ் அகர்வால்,சினியுக் பிலிம்ஸ் நிறுவன இயக்குநர் மொஹமத் மொரானி ஆகியோரிடம் சிபிஐ விசாரணை நடத்தியபோது, அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் 2G ஊழலில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.200 கோடிக்கான ஒப்பந்தத்தை கலைஞர் டி.வி. மேற்கொண்டது அம்பலமாகியுள்ளது.