May 17, 2011
 

கோட்டையில் ஜெ.,: முதல்வராக மீண்டும் பொறுப்பேற்பு: முதல் கையெழுத்திலேயே அதிரடி

சென்னை: பெண்களுக்கு தாலிக்கு தங்கம் இலவசம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி, ஓய்வூதியத் தொகை உயர்வு உள்ளிட்ட ஏழு கோப்புகளில், கோட்டையில் பொறுப்பேற்றதும் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

முதல்வராக ஜெயலலிதா நேற்று பகலில், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பொறுப்பேற்றார். பின், மாலை 6:40 மணிக்கு கோட்டைக்கு வந்தார். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தலைமைச் செயலக ஊழியர் சங்கம் சார்பில், மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின், முதல்வர் அறையில் பணியை துவக்கிய ஜெயலலிதா, ஏழு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். நேற்று பவுர்ணமி என்பதால், முக்கிய உத்தரவுகளில் இரவில் அவர் கையெழுத்திட்டுள்ளார். இந்த உத்தரவுகள் குறித்து, நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:

* படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதியுதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதியுதவியோடு, மணப்பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய, 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ஆணை பிறப்பித்து, அதற்குரிய கோப்பில் கையெழுத்திட்டேன்.

* இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, மணப்பெண் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்.

* முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுமென, தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதன்படி, ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியம், ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* பொது வினியோகத் திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

* தமிழகத்தின் கடலோர மீன் வளத்தை பாதுகாக்க வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டது.

* அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க, மகப்பேறு கால சலுகையாக ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து, உத்தரவிடப்பட்டது.

* அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் செயல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு செயல்படுத்தவும், புதிய துறை ஒன்றை துவக்க உத்தரவிடப்பட்டது. இத்துறை, "சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை' என்ற பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை, தேர்தல் வாக்குறுதிகள் அமலாக்கத் துறையின் அமைச்சராக தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற வேலுமணி பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முதல்வருக்கு ராசி எண் 7: முதல்வர் ஜெயலலிதாவுக்கு 7ம் எண் ராசியான எண்ணாக கருதப்படுவதால், 7ம் எண்ணுக்கு தற்போது முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆன்மிகம், ஜோதிடம், எண் கணிதம் மீது முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை கொண்டவர். கடந்த 1991-96ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 9ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்தது. கடந்த 2001-06ம் ஆண்டு வரை முதல்வராக இருந்த போது, 6ம் எண் அவருக்கு ராசியான எண்ணாக இருந்து. தற்போது கேது திசையின் அடிப்படையில், 7ம் எண் அவருக்கு ராசியான எண்ணாகக் கருதப்படுகிறது. தேர்தலில் அ.தி.மு.க., வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில், 160 பேர் இடம் பெற்றனர். அதன் கூட்டுத்தொகை 7. அதேபோல் முதல்வர் பதவியை ஏற்ற நேற்று 16ம் தேதி. அதன் கூட்டுத்தொகை 7. புதிய அமைச்சரவையில் இடம் பெற்றவர்கள் 34 பேர். அதன் கூட்டுத்தொகையும் 7. முதல்வராக பொறுப்பேற்ற பின் ஜெயலலிதா, நேற்று பழைய தலைமை செயலக அலுவலகத்திற்கு சென்று, 7 கோப்புகளில் கையெழுத்திட்டார். எந்த செயலிலும் தற்போது, 7ம் எண் முக்கியத்துவம் பெறுகிறது. எனவே, 7ம் எண் முதல்வருக்கு ராசியான எண்ணாக அ.தி.மு.க.,வினர் கருதுகின்றனர்.