June 26, 2011
 

29-ல் சிப்காட் பகுதியில் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்

கடலூர், ஜூன் 25: கடலூர் சிப்காட் பகுதி மக்களுக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் 29-ம் தேதி நடத்தப்படும் என்று ஆட்சியர் வே.அமுதவல்லி சனிக்கிழமை தெரிவித்தார்.

ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள (20 கிராமங்கள்) மக்களுக்கு முதற்கட்டமாக, புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம் 29-ம் தேதி காலை 10 மணிக்கு குடிகாடு கிராமத்தில் நடத்தப்படும்.

டாக்டர் கதிர்வேலு தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையின் கீழ் பணியாற்றும், மருத்துவ அலுவலர்கள் மருந்தாளுநர்கள், மருத்துவப் பணியாளர்கள் கொண்ட குழுவினர் கலந்துகொண்டு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வர். போதிய மருத்தவக் கருவிகள் மற்றும் மருந்துகளுடன் இந்த மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் (நீரீ) ஓராண்டு ஆய்வு நடத்தி, 2007ல் வெளியிட்ட அறிக்கையில், சிப்காட் பகுதியான கடலூர் மற்றும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களின் வளிமண்டலத்தில் புற்று நோயை உருவாக்கும் மோசமான ரசாயனங்கள், அங்கீகரிக்கப்பட்ட அளவைவிட 2 ஆயிரம் மடங்கு கலந்து இருப்பதாகத் தெரிவித்தது. மேலும் இதுகுறித்து மக்களுக்கு தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் நடத்த வேண்டும் என்றும், அதற்கான படிவத்தையும் பரிந்துரைத்தது.

ஆனால் அத்தகைய மருத்துவப் பரிசோதனை இதுவரை நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன், புதிய மாவட்ட ஆட்சியர் அமுதவல்லி தலைமையில் நடந்த, சிப்காட் தொழிற்பேட்டை சுற்றுச்சூழல் ஆய்வுக் கூட்டத்தில், நீரீ அறிக்கை குறித்து, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தெரிவித்திருந்தார்.

Back