June 25, 2011
 

மின்வெட்டு நேரம் 50 சதவீதம் வரை குறைக்கப்படும் : மின்வாரியம்!

சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகளில் மின்வெட்டின் காலம் 3 மணி நேரத்திலிருந்து 1 1/2 மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சில பகுதிகளில் அறிவிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக மின்சாரம் நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் தொழில்கள், விவசாயப் பணிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளது.

தமிழகத்தின் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள மின்வெட்டே ஆட்சி மாற்றத்துக்கும் வழிவகுத்ததாக அரசியல் நோக்கர்கள் முதல் பொதுமக்கள் வரை கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் புதிய முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் தமிழ்நாட்டில் மின்வெட்டு படிப்படியாக குறைக்கப்படும் என்று அறிவித்தார். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மின்வெட்டை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் கட்டமைப்புப் பணிகளில் சில நிறைவுறும் கட்டத்தை எட்டியுள்ளது. நீர்ப் பிடிப்புப் பகுதியில் பெய்துள்ள மழையின் காரணமாக அணைகள் திறக்கப்பட்டுள்ளதால் நீர் மின் நிலையங்கள் செயல்படத் தொடங்கி உள்ளன. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரமும் அதிகரித்துள்ளது. இதனால் அறிவிக்கப்படாத பல மணி நேர மின்வெட்டு என்பது தற்போதைக்கு இல்லை. குறிப்பிட்ட 3 மணி நேரம் மட்டுமே மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மூன்று மணி நேர மின்வெட்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒன்றரை மணி நேரமாகக் குறைக்கப்படும் என்று மின்வாரி அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஜூலை 1ஆம் தேதி முதல் மின்வெட்டைக் குறைக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் மின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் அதிகரித்து உள்ளது. இது ஜூலை மாதத்தில் மேலும் அதிகரிக்கும். கோவை போன்ற நகரங்களில் தற்போது அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும் நேரத்தில் மின்சாரம் நிறுத்தப்படுவதில்லை. மின் உற்பத்தி குறையும் நேரத்தில் மட்டும் குறிப்பிட்டப்படி 3 மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு என்பது எங்கும் கிடையாது. குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்வெட்டு அமலில் உள்ளது. ஜூலை 1ஆம் தேதி முதல் 3 மணி நேர மின்வெட்டு 2 மணி நேரமாகவும் பின்னர் ஒன்றரை மணி நேரமாகவும் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கிராமப்பகுதிகளில் 6 மணி நேர மின்வெட்டும் படிப்படியாகக் குறைந்து விடும். முதலில் நகர் பகுதியில் மின்வெட்டு குறைக்கப்படும். அடுத்து புறநகர்ப்பகுதியும் கிராமப்பகுதிகளிலும் மின் வெட்டு குறையும். பிள்ளை பெருமாள் நல்லூர் மின் உற்பத்தி நிலையம் இன்று முதல் செயல்பட தொடங்குகிறது. இதன் மூலம் 300 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும், காடம்பாரை மின் உற்பத்தி நிலையத்தில் இருந்தும் 400 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மின் தட்டுப்பாடு குறையும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.

Back